Friday, August 8, 2008

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்.

என்னுடைய 'அதிக விவரம்' இல்லாத 6-7 வகுப்பு வரையிலான வயதில், என் வயதொத்த மற்றப் பசங்களைப் போல நானும் மிகத் தீவிர ரஜினி ரசிகன். அவரது ஸ்டைலிலும், ஆக்‌ஷனிலும் மெய் சிலிர்த்தவர்களில் நானும் ஒருவன். 'மிஸ்டர் பாரத்' படம் வந்த சமயத்தில் தியேட்டர்ல ரஜினிக்குச் சரிசமமாக சத்யராஜின் ரசிக மன்றங்களின் தோரணங்களைக் கண்டு கோபமடைந்திருக்கிறேன். இவ்வளவு கெட்டவனுக்குப் போய் இப்படியெல்லாம் ரசிகர்கள் இருக்கிறார்களே..' என்று வருத்தமும் அடைந்ததுண்டு. 'நம்ம ரஜினி உடற ஒரே உதைல சத்யராஜ்லாம் தூள் தூள்றா' -ன்னு நண்பர்களுடன் வீர வசனம் பேசியதுண்டு. படிக்காதவன் படத்துல வர “ஊரத் தெரிஞ்சுக்கிட்டென், உலகம் புரிஞ்சுகிட்டேன் என் கண்மணி” -ன்ற பாட்ட 'தலைவரோட' ஸ்டைலிலேயே தண்ணி அடிச்சுட்டு ஆடர மாதிரி பாடி அப்பாக்கிட்டத் திட்டு வாங்கியதும் உண்டு.

விவரம் தெரியத் தெரிய, சினிமாவிற்கும் நிஜத்திற்கும் வேறுபாடுகள் புரிய ஆரம்பித்தவுடன் நடிகர்கள் வெறும் நடிகர்களாகவேத் தோன்றினார்கள். மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா, பாலச்சந்தர், பாக்யராஜ், பாசில் (எத்தன ‘பா'!!!!) போன்ற இயக்குனர்கள் உண்மையான திறமையாளர்களாகத் தோன்றினார்கள். 'ரஜினி ரசிகனாக' இருந்தபோது அவ்வளவாய் பிடிக்காததிருந்த ‘ஆறிலிருந்து அறுபது வரை', ‘எங்கேயோ கேட்ட குரல்', ‘புதுக்கவிதை', ‘முள்ளும் மலரும்' போன்றப் படங்கள் பிடிக்க ஆரம்பித்தது. சரியா சொல்லனும்னா ‘புரிய' ஆரம்பித்து. என்னைப்பொருத்தவரை அந்தப் படங்களில் ரஜினியேற்ற பாத்திரங்களில் வேறு யாரலும் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது.
குறிப்பாக தங்கச்சியின் மேல் முரட்டுத்தனமான பாசம் கொண்ட அண்ணனாக ரஜினி வந்த ‘முள்ளும் மலரும்' ஒரு காவியம் என்றால் மிகையாகாது.

அப்புறம் எங்கேயோ தவறு நடந்து ரஜினி ஒரு வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டாரோ என்று தோன்றுகிறது. அதே சமயத்தில் அந்த வட்டத்திலேயே இவ்வளவு ரசிகர்களும் சிக்கிக்கொண்டார்கள் என்பது என்னைப் போன்ற யதார்த்த திரைப்பட ரசிகர்களுக்கு வேதனையானச் செய்தி.

ஆனால் அந்த வட்டத்தில் உள்ள ரசிகர்களின் வாதமும் தவறானதில்லை. தினம் தினம் வாழ்க்கையில் போரடிக்கொண்டிருக்கும் வேலையில், திரைப்படம் தான் சராசரி ரசிகனுக்கு ஒரே பொழுதுபோக்கு. அந்த 2 1/2 மணி நேரமாவது 'புத்திக்கும்', மனதிற்கும் ஓய்வு கொடுத்து, நன்றாக சிரித்து விட்டு, தன்னுடைய கவலைகள் எல்லாவற்றயும், ரஜினி படங்களில் செய்வது போல் 'சுத்தி சுத்தி' உதைத்துவிட்டு மன நிறைவுடன் தியேட்டரை விட்டு வெளியே வருகிறான்.

தனது வாழ்க்கையில் நடப்பதையே திரையிலும் காண்பதில் விருப்பம் இல்லாததில் எந்தத் தவறுமில்லை. தவறு எங்கேயென்றால், திரையரங்குக்குள் புத்தியை இழக்கும் ரசிகன், வெளியிலும் இழந்துவிடுகிறான் என்பதில்தான். கட் அவுட் வைப்பதும், ‘பாலபிஷேகம்' செய்வதும், முதல் நாள் படம் பார்க்க முடியாமல் போனால் ரயில்ப் பாலத்தில் விழுந்து சாவதும், அவர்கள் முட்டாளாகிவிட்டார்கள் என்பதுக்கான சாட்சிகள். அவரை வழி நடத்தும் பொறுப்பிலிருக்கும் அவர்களது தலைவனும் ரசிகர்களின் இந்த முட்டாள்த்தன செய்கைகளினால் பணம் சம்பாரிப்பது எளிதாகிவிட்டதால் அதையே ஊக்குவிக்கத் தொடங்கிவிட்டார்கள். மேலும் கொடுமை என்னவென்றால், இந்தத் தலைவனைப் பார்த்து, புற்றீசல் போல பல ‘லிட்டில்', ‘இளைய' தலைவர்களும் உருவாகிக்கொண்டிருப்பதுதான்.இந்த ரசிகர்களை இப்படியே வைத்திருக்க வேண்டுமென்ற நோக்கில் ரஜினியை வைத்து இயக்கும் இயக்குனர்கள் அவரது பாத்திரங்களை முட்டாளாக்கினார்கள். அவரை பொம்பளைகளிடம் சவாலிடும் ‘வீரனாக' சித்தரித்து, ‘பொம்பளைனா அப்படியிருக்கனும், இப்படியிருக்கனும்' -னு வசனங்களையும், கேனத்தனமான ‘பஞ்ச் டயலாக்குகளை' கொடுத்தும் 'விசிலடிச்சான்' ரசிகர்களை உற்சாகப் படுத்தினார்கள்.

ரஜினி என்னைப் பொருத்தவரை மிக நல்லவர். ஆனால் நமது சமுதாயத்தில் நல்லவனுக்கும் முட்டாளுக்கும் இருக்கும் இடைவெளி மிகக்குறைவு. என்னைப் பொருத்தவரை ரஜினியை சுற்றியிருப்பவர்கள் அவரின் நல்ல குணத்தைப் பயன்படுத்தி வடிகட்டிய முட்டாளாக்கி விட்டார்கள். ஒருமுறை தலைமுழுதும் மொட்டையாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, அமெரிக்காவில் ஒரு சலூனில் முடி வெட்டும்போது தூங்கிவிட்டதால் தன்னை மொட்டையடித்து விட்டதாக அவரேச் சொன்னார். அதுதான் அவரது திரைப்பட வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.தனிமனித போற்றுதலும், காவடி தூக்குவதும், தலைவனாக்குவதும் நம்ம ரத்தத்திலேயே ஊரியது. யாரலும் மாற்ற முடியாது. தாள முடியாத பிரச்சினைகளிலும், தீர்க்க முடியாத துக்கங்களிலும் நாள்தோரும் அல்லல் படும் சராசரி ரசிகன் ஒரு 'சூப்பர் பவரால்' தன்னைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்தால் தான் என்னவோ இந்த மாதிரி சூப்பர் ஸ்டார்களால் தலைவனாக முடிகிறது.

ஒரு இனத்தை, மொழியைக் காக்க வேண்டுமெனில், உலகம் போற்றும், காலத்தால் அழியாத படைப்புகள் அந்த மொழியிலிருந்து வந்து கொண்டேயிருக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் இன்னோரு திருக்குறளோ, பாரதியோ வந்து உலக கவனத்தை ஈர்க்க முடியாது. ஆனால் இரானியம், வங்காள படங்களைப் போல் தமிழிலும் உலக கவனத்தை ஈர்க்கும் படங்கள் வந்தால், தமிழ் மொழியின் புகழ் பரவவும், தமிழ்ப் பேசுவதை நமது அடுத்தத் தலைமுறை தலைகுனிவாக கருதுவதையும் ஒரளவேனும் தடுக்கலாம்.

காதல், பருத்திவீரன், கல்லூரி, சுப்பிரமணியபுரம் போன்ற படங்கள் வந்து ரசிகர்களின் ரசனையை கொஞ்சம் கொஞ்சமாய் உயர்த்திக் கொண்டிருக்கும் போது, 'சிவாஜி', ‘குசேலன்', ‘குருவி' போன்ற படங்கள் ஒரு சாபக்கேடு.

தற்போது நிறைய பதிவர்களும், ஞானி போன்ற எழுத்தாளர்களும், ரஜினியைப் பற்றி எழுதுவதே, ரஜினி தனது புகழை பயன்படுத்தி, கொஞ்சமாவது தனது ரசிகனின் ரசனையை உயர்த்தமாட்டரா என்ற அங்கலாப்பில்தான். ரஜினி நினைத்தால் கண்டிப்பாக இது முடியும். மாறிக்கொண்டிருக்கும் ரசிகர்களின் ரசனைய சரியாக பயன்படுத்த ஒரு அருமையான வாய்ப்பு இந்த குசேலன் படம். “கத பரையும் போல்” படத்தை அப்படியே சீனிவாசனை இயக்கச் சொல்லி, முழுக்க முழுக்க கதையை மட்டுமே நம்பி, எந்த விளம்பரமும் இல்லாமல் தானே தயாரித்து வெளியிட்டிருக்கலாம். யதார்த்தமாக படம் பார்க்கச் செல்லும் ரசிகன், படத்தில் ரஜினியின் எதிர்பாராத தோற்றமே வெகு விளம்பரமாகியிருக்கும். அப்படி இந்தப் படம் வெற்றி பெற்றிருந்தால் ரஜினி உண்மையாகவே சூப்பர் ஸ்டார்.

8 comments:

ஆ.ஞானசேகரன் said...

//ரஜினி என்னைப் பொருத்தவரை மிக நல்லவர். ஆனால் நமது சமுதாயத்தில் நல்லவனுக்கும் முட்டாளுக்கும் இருக்கும் இடைவெளி மிகக்குறைவு. என்னைப் பொருத்தவரை ரஜினியை சுற்றியிருப்பவர்கள் அவரின் நல்ல குணத்தைப் பயன்படுத்தி வடிகட்டிய முட்டாளாக்கி விட்டார்கள்//
சூரியா,.. மிக நல்லப்பதிவு புரியவேண்டியவர்களுக்கு புரியுமா என்பது சந்தேகமே? படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பாகுபாடின்றி விசிலடிச்சானாக ரஜினியை பொருத்தவரை இருக்கின்றார்கள்>...
http://aammaappa.blogspot.com/2008/08/blog-post.html

karikalan said...

//காதல், பருத்திவீரன், கல்லூரி, சுப்பிரமணியபுரம் போன்ற படங்கள் வந்து ரசிகர்களின் ரசனையை கொஞ்சம் கொஞ்சமாய் உயர்த்திக் கொண்டிருக்கும் போது, 'சிவாஜி', ‘குசேலன்', ‘குருவி' போன்ற படங்கள் ஒரு சாபக்கேடு. \\

அதெல்லாம் ச‌ரிதாங்கோ ஆனால் த‌ச‌வ‌தார‌ம் ப‌த்தி ஒண்ணுமே சொல்ல‌லியே.
அது உல‌ த‌ர‌மா, இல்லே ம‌சாலா த‌ர‌மா?

சூர்யா said...

ஆ. ஞானசேகரன்,

பாராட்டுக்கு நன்றி.

சூர்யா said...

கரிகாலன்,

தசாவதாரமும் நான் பார்க்கவில்லை. விமர்சனங்களைப் படித்தபோதே இது ரஜினியின் சிவாஜியைப் பார்த்து கமலும் ஒரு படி மேலே போய் நம்மைப் போன்ற ரசிகர்களை முட்டாளாக்கியுள்ளார் என்றே தோன்றியது. பல வேடங்களில் தோன்றுவது ஒரு நடிகனின் திறமையே இல்லை. அது ஒரு மேக்கப் கலைஞனின் திறமையின் வெளிப்பாடே. அதுவும் உருப்படியாக இல்லை என்பது அந்தப் படத்தின் சிலத்துண்டுப் படங்களிலிருந்தே புரிந்தது.
உலகத்தரமானப் படம் என்பது தன்னைச் சார்ந்த மக்களின் நுண்ணிய உணர்வுகளையும், பிரச்சினைகளையும், வாழ்க்கைமுறையையும், பண்பாட்டையும் பதிவிடுவதே. வெறும் graphics காட்சிகளை வைத்து உலகத்தரமான படத்தை உருவாக்க முடியாது.

உங்கள் கேள்விக்கான பதில், தசாவதாரம் கண்டிப்பாக ‘மசாலாத் தரமென்றே' நான் கருதுகிறேன். அந்த மசாலாத்தனத்தயும் உலகத்தரத்துடன் படைத்திருப்பாதாக ‘உலக நாயகனே' பாடலைப் பார்த்தபோது தோன்றவில்லை.

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

Sri said...

நல்லா அனலைஸ் பண்ணிருக்கீங்க அண்ணா..!! :-))
நல்லாருக்கு...!! :-))

சூர்யா said...

நன்றி ஸ்ரீ.

ஜி said...

//தன்னை மொட்டையடித்து விட்டதாக அவரேச் சொன்னார். அதுதான் அவரது திரைப்பட வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.
//

:)))

Sema post...

சூர்யா said...

நன்றி ஜி!!!