Friday, September 19, 2008

கற்றது தமிழ் : பிடித்ததும், வெறுத்ததும்..

படம் வந்து இவ்வளவு நாள் கழித்து, ‘உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக' ஒளிபரப்பிய பின் எதற்கு இந்த விமர்சனம்?

'குப்பை வலையில்' 2 வாரத்துக்கு முன் 'கற்றது தமிழ், செத்தது ரசனை!' என்றத் தலைப்பிலான பதிவைப் படித்தபின் கீழிருக்கும் பின்னூட்டத்தை இட்டிருந்தேன்.

'இன்னும் நான் படம் பார்க்கவில்லை.. ஆனால் ஒரு காட்சியைப் பார்க்க நேரிட்டது. கடற்கரையில் காதல் செய்து கொண்டிருக்கும் காதலர்களை கொல்லும் காட்சி. படு முட்டாள்தனமாகப் பட்டது. அந்தக் காட்சியைப் பார்த்ததும் தமிழனை இதைவிடக் கேவலப் படுத்த முடியாது என்று தோன்றியது. அதனால் படம் பார்க்கும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். இப்பதிவைப் படித்ததும் அந்த முடிவு சரிதான் என்று படுகிறது. நன்றி'

நான் பார்த்த ஒரு காட்சி: கடற்கரையில் காதலர்களை நாயகன் சுடும் காட்சியும் அதை ஒத்த வசனங்களும். அக்காட்சியைப் பார்த்ததும் எனக்குத் தோன்றிய எண்ணம், ‘இது அவனது சொந்த கையாலாகாதத் தனத்தையே காட்டுகிறது.. இதற்கும் தமிழ் படிப்பதற்கும் என்ன சம்மந்தம்? தமிழ் படிக்கிறவன் இதைத்தான் செய்வான் என்று கூறி தமிழனை இதற்கு மேல் அவமானப் படுத்த முடியாது'


இதனைப் படித்த தமிழ்ப்பறவை said...

''குப்பை' எனும் வலைப்பூவில் 'கற்றது தமிழ்' படத்தைப் பற்றிய தங்கள் பின்னூட்டம் கண்டேன். ஒரு காட்சியை மட்டும் வைத்து படத்தை எடை போடாதீர்கள்..
கதையின் கருத்து எப்படியோ, படமாக்கிய விதம், ஒளிப்பதிவு, இசை எனப் பல விஷயங்கள் உள்ளன..
படத்துக்கான எதிர்வினைகள் வலைப்பூவில் தீவிரமாக இருந்தது.. காரனம் உங்களுக்கே தெரியும்...
முடிந்தால் மூன்று ம்ணி நேரம் செலவழித்துப் படம் பாருங்கள்( எந்த விமர்சனத்தையும் நினைத்துப்பாராமல்) பின்பு நீங்கள் விமர்சியுங்கள் படம் குப்பையா இல்லை மோசமான குப்பையா எதுவாயினும் தெரிவியுங்கள்..
ஒரு நண்பராகக் கூறுகிறேன்.. பின் படம் பார்ப்பதும், பார்க்காததும், படம் உங்களுக்குப் பிடிப்பதும்,பிடிக்காததும் வேறு விஷயம்..


- என்று கூறியிருந்தார்.

நேற்று படத்தை ‘முழுவதும்' பார்த்தேன்..

முதலில் படத்தில் பிடித்தவைகள்:

1) நடிகர்கள், நடிப்பு: கதை நாயகனிலிருந்து, அவனது நண்பனாக வந்து அடி வாங்கிப் போகும் ஆள் வரை... முகங்களின் தேர்வு கனக்கச்சிதம். ஒரு காட்சியில் வந்து போகும் நாயகியின் மாமா கூட அவ்வளவு பொருத்தம். இது வரை எந்தவொரு படத்திலும் இவ்வளவு அருமையான, பொருத்தமான முகங்களைப் பார்த்ததில்லை. அது சுலபமான வேலையும் இல்லை. இயக்குனர் இதில் தனித்திறமை பெற்றிருக்கிறார். அனைவரும் இயல்பான காட்சியமைப்புகளில் மிக இயல்பாகவே நடித்திருக்கிறார்கள்.
பின்னனி (dupping sound) கொடுக்காமல் நேரடியாக ஒலிப்பதிவு செய்திருக்கிறார்களோ என்று தோன்றியது.

2)ஒளிப்பதிவு: 'கலக்கல்'!!!!! ஒளிப்பதிவாளர் கதிர் ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து பதித்துள்ளார். படத்தில் வந்த முகங்கள் அவ்வளவு இயல்பாக இருந்ததற்கு இவரது பங்கும் முக்கியமான ஒன்று. நிறைய 'காட்சிகள்' ஓவியமாகத் தோன்றியது. இவரது வேறு படங்கள் யாருக்காவது தெரிந்தால் கண்டிப்பாக சொல்லுங்கள். பார்க்க வேண்டும்.


3) கருத்து: இந்த படத்தின் மூலம் இயக்குனர் சொல்ல வந்த கருத்தாக எனக்குத் தோன்றியது 'ஒரு சமூகத்தில் ஒரு சாரார் மட்டுமே பணம் சேர்ப்பதும் ஒரு சாராருக்கு எதுவும் கிடைக்காமல் போவதும் கூடிய சீக்கிரத்தில் குற்றங்களை அதிகரிக்கச் செய்யும்.' இது முற்றிலும் உண்மை. நம்மைப் போன்று IT-யில் வேலை செய்பவர்கள் சம்பாதிக்கும் பணம் சராசரி மக்களின் சம்பளம் (நம்மை விட பல மடங்கு உழைத்தும்) பல மடங்குக் குறைவு. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையான மக்களின் கோபமும் அங்கலாப்பும் நியாயமானதே..

இனி படத்தில் வெறுத்தவைகள்:

நல்ல கருத்து, அட்டகாசமான நடிகர் தேர்வு, அருமையான ஒளிப்பதிவு, குறைகளில்லாத இசை.. இவை அத்தனையும் ‘விழலுக்கு இறைத்த நீர்', ‘குரங்கு கையில் பூமாலை'.

சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளைச் சொல்ல ‘கற்றது தமிழ்' என்ற தலைப்பு எதற்கு என்று புரியவில்லை.
நாயகன் ஏன் நிறையத் தமிழ் வசனத்திற்கு அப்புறம் ஆங்கிலத்தில் திருப்பிச் சொல்லுகிறான் என்பதும் புரிய வில்லை.

தமிழ் படிப்பதால் உள்ள பிரச்சினைகளை சொல்வதா? பிராபாகரன்- ஆனந்தியின் காதலைச் சொல்லுவதா? சமூகப் பிரச்சினைகளைச் சொல்வதா? என்று இயக்குனர் குழம்பி..சரி எல்லாவற்றயும் சொல்லிவிடுவோம்.. என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு காட்சி வைத்து.. ஒரு தொடர்ச்சியில்லாமல் செய்து விட்டார்.

இயக்குனருக்கு முதல் படம் என்று நினைக்கிறேன். முதல் படம் நன்றாக அமைய வேண்டும் என்ற தவிப்போ என்னவோ, தன் மனதில் உள்ள எல்லா எண்ணங்களையும் காட்சிகளாக்க வேண்டும் என்று எடுத்திருப்பதால் பல காட்சிகள் மனதில் பதிய மறுக்கிறது. கடைசி 10 நிமிடங்களைத் தவிர மீதி நேரங்களில் படத்தில் கவனம் செலுத்துமளவிற்கு காட்சி அமைப்புகள் இல்லை.

படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தையும் சிறு பிள்ளைத்தனமான காட்சி வரிசைகளால் வீணடித்திருக்கிறார். உதாரணத்திற்கு, நாயகனுக்கும், அவரது தமிழாசிரியற்கும் வரும் பாடல்.. தமிழாசிரியரை அதற்கு முந்தைய காட்சியில் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர் யார் என்று உணரும் முன்பே பாடல் வந்து விடுகிறது.

அப்புறம் இந்த கதை சொல்லும் பாணி.. நாயகன், ஒருவனைப் பிடித்து அவனிடம் தன்னுடைய பராக்கிரமங்கள் எல்லாம் சொல்லுவது போல்.. படம் முழுவதும் நாயகனின் குரல் ஒவ்வொரு காட்சியிலும் விளக்கம் சொல்லிக்கொண்டிருப்பது.. சகிக்கவில்லை. இது ஒரு கடைந்தெடுத்த அமெச்சூர்த்தனம். இதற்கு திரைப்படம் தேவையில்லை. ஒரு வானொலி நாடகமோ புத்தகமோ போதும்.

இப்போதுள்ள பல புதிய இயக்குனர்கள் நல்ல கதை எழுதுகிறார்கள். அவர்களிடம் நல்ல நல்ல கருத்துக்கள் இருக்கிறது. ஆனால் அவர்கள் திரைக்கதையை ரொம்பவும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். இதில் சேரன் ஒரு சிறந்த உதாரணம் (பாரதி கண்ணம்மா தவிர்த்து).

ஒரு பைத்தியக்காரனை தமிழ் படித்தவனாக காட்டி, கற்றது தமிழ் என்று அழகானத் தலைப்பு வைத்து, அவன் செய்யும் பைத்தியத்தனமான வேலைகளை தமிழ் படித்தவன் செய்யும் செய்கைகளாக செய்து தமிழர்களை கேவலப்படுத்தியிருப்பது வெறுப்பாக இருந்தது.

இந்தக் கதையையும், காட்சிகளையும் பிரித்து 'நெஜமாத்தான் சொல்றியா?' என்ற ஒரு அழகான காதல் படமாகவும், 'பைத்தியக்காரன்' என்ற சமூகப் புரட்சிப் படமாகவும் எடுத்து விட்டு, ஒரு தேர்ந்த திரைக்கதையுடன் ‘கற்றது தமிழ்' என்ற தலைப்பில் தமிழ் வழிக் கல்வி படிப்பதால் உள்ள உண்மையான பிரச்சினைகளை மட்டுமே வைத்து ஒரு படமாகவும் எடுத்திருந்தால் கண்டிப்பாக 3 படங்களும் ரசிக்கும் படியாகவும் இருந்திருக்கும், வெற்றியும் பெற்றிருக்கும். நடிகர்கள், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், மற்றும் இதர திறமையாளர்களின் உழைப்பும் வீணாகியிருக்காது.

Thursday, September 18, 2008

'கட்டிடக்கலை' - தனித்து நின்ற படங்கள்

'கட்டிடக்கலை' என்றத் தலைப்பில் இந்த மாதப் PIT போட்டியில் பங்கேற்ற புகைப்படங்களில் காட்சியடக்கம் மற்றும் தொழில்நுற்பத்தில் சரியாகவும், அழகானதாகவும் இருந்ததோடு, ஒரு பொதுவானதொரு விஷயத்தை மனதில் தோற்றுவிப்பதாகவும், கட்டிடக்கலை சார்ந்த ஒரு உணர்வையும் (அது ஒரு சமூக சிந்தனையாகவோ, நம்மில் பெரும்பாலோனோரின் பழைய நினைவாகவும் இருக்கலாம்) மனதில் நினைக்க வைப்பதாகவும் இருந்தப் படங்களாக நான் மிகவும் ரசித்தது..



நாதனின் இந்தப் படத்தை மிகவும் ரசித்தேன். அத்தனைப் படங்களுக்கு மத்தியிலும் ஒரு நிமிடமாவது சிந்திக்க வைத்த படம். சிதிலமடைந்த அந்தக் கதவில் இருக்கும் நுணுக்கமான கலையமைப்பு நிறைய சொல்லுகிறது. இந்த வருடம் ஊருக்கு சென்றிருந்த போது, இதே போன்று எங்கள் கிராமத்தில் எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த வீடுகளைப் பார்த்த போது, எத்தனை கதைகளின், நினைவுகளின் மிச்சமாக இருந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கவைத்தது.



இந்தப் படம் நம்மூர் பள்ளிக்கூடங்கள் பலவற்றை நினைவு படுத்துவதாக இருந்தது. சிதிலமடந்த தூண்களில் தெரியும் செங்கற்கள் அருமை. தளமும், ஒளியமைப்பும் அட்டகாசமாக அமைந்த படம்.

இந்த மாதிரி கட்டிடங்களும், இப்போது பளப்பளத்துக் கொண்டிருக்கும் பல கட்டிடங்களுக்கு இணையான, அல்லது அதற்கு அதிகமான உழைப்பில் தான் கட்டப்பட்டிருக்கும்.

தனது கடின உழைப்பால் பணக்காரனாகவும், செழிப்பாகவும் உயர்ந்தவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நம் சமுதாயம், அதே அல்லது அதற்கு மேலும் உழைத்தும் கெட்ட நேரத்தாலோ, சரியான வாய்ப்புகள் அமையாமல் நொடிந்து போனவர்களை கண்டுகொள்வதில்லை. அது போலவே இப்படங்களும்..

காலத்தால் அழிந்து போன நமது பழைய வீடுகளின் மிச்சத்தை கலையழகுடன் பதித்திருக்கும் நாதனின் படமும், கலையழகுடன் இருந்து இப்போது அழிந்துபோன ஒரு கட்டிடத்தைப் பதித்திருக்கும் அமலின் படமும், பல புதிய கட்டிடப் படங்களுக்கு மத்தியில் தனித்திருந்தால் என்னை மிகவும் கவர்ந்தது.


இதெல்லாம் சொல்லிவிட்டு, நம்மப் படத்தப் பத்தி நாமே சொல்லலைனா வேற யார் சொல்லப்போறா..?

An hall with thousand pillars

கட்டிடக்கலை என்ற தலைப்பு என்றதும் நமது மாமல்லபுரம், மதுரை மீனாட்சி கோவில், தஞ்சை பெரிய கோவில், ஸ்ரீரங்கனாதர் ஆலயம், மற்றும் தென்தமிழ் நாட்டில் உள்ள பல கோவில்கள் தான் என் நினைவிற்கு வந்தன. நம் நாட்டில் இருப்பவர்களிடமிருந்து இந்தக் கோவில்களின் படம் எதுவும் வராதது கொஞ்சம் எமாற்றமாக இருந்தது.

நமது கோயில்களில் உள்ள கட்டிடக் கலையின் அழகை எப்போது பார்த்தாலும் வியப்பதுண்டு.. அதே சமயத்தில் கவனிப்பாரற்றும், பராமரிப்பற்றும் சிதிலமடைந்து காணப்படும் பல கோயில்களைப் பார்க்கும் போது மனம் கனக்கும். மற்ற நாடுகளில் உள்ளக் கட்டிடக்கலையை அதன் பளபளப்பிலும் விளம்பரத்திலும் மயங்கி பாராட்டும் நம்மூர் காரங்களைப் பார்த்தால் கோபமாக வரும். நம் நாட்டுக்கோயில்களில் உள்ள கட்டிடக்கலையின் அற்புதத்தில் பாதி கூட இல்லாத கட்டிடங்களை, தலையில் தூக்கி வைத்து ஆடும் போது அங்கலாப்பாகவும், வெறுப்பாகவும் இருக்கும்.

நம் நாட்டின் கட்டிடக் கலையின் பெருமையையும்(ஆயிரம் தூண்கள்), அதன் பழமையயும் (கருப்பு வெள்ளை)கவனிப்பாரற்று கிடக்கும் நிலைமையையும்(தளத்தில் கிடக்கும் குப்பை) இப்படம் சிறிதளவேனும் சித்தரிப்பதாகக் கருதுகிறேன்.

Saturday, September 13, 2008

கட்டிடக்கலை - PIT மெகாப் போட்டி

”கட்டிடக்கலை” தலைப்புக்காக நான் எடுத்தப் படங்கள்ல ஆறு படங்கள் உங்கள் வோட்டுக்காக..
இதில் எந்தப் படத்தை போட்டிக்கு அனுப்புறதுன்னுத் தெரியலை..
உங்களுக்கு எது புடிச்சிருக்குன்னு சொன்னீங்கனா ரொம்ப உதவியா இருக்கும்..
------------------------------------------------------------------

பதிவிற்கு வந்து வோட்டளித்தவர்களுக்கும், கருத்துக்களை பகிர்ந்தவர்களுக்கும் நன்றி..

ஆறு படங்களில், மூன்றைத் தெரிவு செய்து.. மேலும் சுயவிமர்சனம் செய்து பார்த்ததில்..

படம் 3:

இரவு நேரத்தில் முக்காலி வைத்து எடுத்தது.. மிக நன்றாக வந்திருந்திருக்கிறது.. படத்திலிருக்கும் இந்த இடமும் மிகவும் பிடிக்கும். Technical - ஆகவும், பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் ‘கட்டிடக்கலை' என்ற தலைப்பில் பார்க்கும் போது அவ்வளவு பிரமிப்பாக இல்லை என்று கருதுகிறேன்.




படம் 2:

மிகவும் பிடித்த படம்.. இந்தப் படத்தில் 2 leading lines சூரியனின் ஒளிக்கீற்றும், மண்டபப் பாதையும்.. 'கடவுள் அவ்வப்போது வேறு நல்ல ஒளிமயமான மாற்றுப்பாதைகளை காட்டுவார்.. ஆனால் சில நேரங்களில் அவற்றை கவனிக்காமல் நமக்கு விதித்தப் பாதையிலேயே நாம் செல்வோம்' - இது இப்படத்தினால் எனக்குத் தோன்றிய தத்துவம்... (என்னக் கொடுமை சரவணன்...?) மறுபடியும் 'கட்டிடக்கலை' என்ற தலைப்பிற்கு இன்னும் முழு பொருத்தமாக இல்லையோ என்றே நினைக்கிறேன்..




படம் 1: (போட்டியில் பங்கேற்பது)

2 ஓட்டுகள்(!) பெற்று வெற்றி பெற்ற படம். ‘பெரும்பான்மையோரின்' கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்..!!

நமது கோயில்களில் உள்ள கட்டிடக் கலையின் அழகை எப்போது பார்த்தாலும் வியப்பதுண்டு.. அதே சமயத்தில் கவனிப்பாரற்றும், பராமரிப்பற்றும் சிதிலமடைந்து காணப்படும் பல கோயில்களைப் பார்க்கும் போது மனம் கனக்கும். இங்கு அமெரிக்காவில், நம் நாட்டுக்கோயில்களில் உள்ள கட்டிடக்கலையின் அற்புதத்தில் பாதி கூட இல்லாத கட்டிடங்களை, தலையில் தூக்கி வைத்து ஆடும் போது அங்கலாப்பாகவும், வெறுப்பாகவும் இருக்கும்.

துள்ளியமாகவும், அவ்வளவு அழகாக இல்லாமல் போனாலும், நம் நாட்டின் கட்டிடக் கலையின் பெருமையையும், கவனிப்பாரற்று கிடக்கும் நிலைமையையும் இப்படம் சிறிதளவேனும் சித்தரிப்பதாகக் கருதுகிறேன்.

அதனால் நெல்லையப்பர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் எடுத்த இப்படத்தையேப் போட்டிக்கு...




இன்னும் கொஞ்சம் மெருகேற்றிய பின்..






மற்றப் படங்கள்..