Thursday, September 18, 2008

'கட்டிடக்கலை' - தனித்து நின்ற படங்கள்

'கட்டிடக்கலை' என்றத் தலைப்பில் இந்த மாதப் PIT போட்டியில் பங்கேற்ற புகைப்படங்களில் காட்சியடக்கம் மற்றும் தொழில்நுற்பத்தில் சரியாகவும், அழகானதாகவும் இருந்ததோடு, ஒரு பொதுவானதொரு விஷயத்தை மனதில் தோற்றுவிப்பதாகவும், கட்டிடக்கலை சார்ந்த ஒரு உணர்வையும் (அது ஒரு சமூக சிந்தனையாகவோ, நம்மில் பெரும்பாலோனோரின் பழைய நினைவாகவும் இருக்கலாம்) மனதில் நினைக்க வைப்பதாகவும் இருந்தப் படங்களாக நான் மிகவும் ரசித்தது..



நாதனின் இந்தப் படத்தை மிகவும் ரசித்தேன். அத்தனைப் படங்களுக்கு மத்தியிலும் ஒரு நிமிடமாவது சிந்திக்க வைத்த படம். சிதிலமடைந்த அந்தக் கதவில் இருக்கும் நுணுக்கமான கலையமைப்பு நிறைய சொல்லுகிறது. இந்த வருடம் ஊருக்கு சென்றிருந்த போது, இதே போன்று எங்கள் கிராமத்தில் எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த வீடுகளைப் பார்த்த போது, எத்தனை கதைகளின், நினைவுகளின் மிச்சமாக இருந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கவைத்தது.



இந்தப் படம் நம்மூர் பள்ளிக்கூடங்கள் பலவற்றை நினைவு படுத்துவதாக இருந்தது. சிதிலமடந்த தூண்களில் தெரியும் செங்கற்கள் அருமை. தளமும், ஒளியமைப்பும் அட்டகாசமாக அமைந்த படம்.

இந்த மாதிரி கட்டிடங்களும், இப்போது பளப்பளத்துக் கொண்டிருக்கும் பல கட்டிடங்களுக்கு இணையான, அல்லது அதற்கு அதிகமான உழைப்பில் தான் கட்டப்பட்டிருக்கும்.

தனது கடின உழைப்பால் பணக்காரனாகவும், செழிப்பாகவும் உயர்ந்தவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நம் சமுதாயம், அதே அல்லது அதற்கு மேலும் உழைத்தும் கெட்ட நேரத்தாலோ, சரியான வாய்ப்புகள் அமையாமல் நொடிந்து போனவர்களை கண்டுகொள்வதில்லை. அது போலவே இப்படங்களும்..

காலத்தால் அழிந்து போன நமது பழைய வீடுகளின் மிச்சத்தை கலையழகுடன் பதித்திருக்கும் நாதனின் படமும், கலையழகுடன் இருந்து இப்போது அழிந்துபோன ஒரு கட்டிடத்தைப் பதித்திருக்கும் அமலின் படமும், பல புதிய கட்டிடப் படங்களுக்கு மத்தியில் தனித்திருந்தால் என்னை மிகவும் கவர்ந்தது.


இதெல்லாம் சொல்லிவிட்டு, நம்மப் படத்தப் பத்தி நாமே சொல்லலைனா வேற யார் சொல்லப்போறா..?

An hall with thousand pillars

கட்டிடக்கலை என்ற தலைப்பு என்றதும் நமது மாமல்லபுரம், மதுரை மீனாட்சி கோவில், தஞ்சை பெரிய கோவில், ஸ்ரீரங்கனாதர் ஆலயம், மற்றும் தென்தமிழ் நாட்டில் உள்ள பல கோவில்கள் தான் என் நினைவிற்கு வந்தன. நம் நாட்டில் இருப்பவர்களிடமிருந்து இந்தக் கோவில்களின் படம் எதுவும் வராதது கொஞ்சம் எமாற்றமாக இருந்தது.

நமது கோயில்களில் உள்ள கட்டிடக் கலையின் அழகை எப்போது பார்த்தாலும் வியப்பதுண்டு.. அதே சமயத்தில் கவனிப்பாரற்றும், பராமரிப்பற்றும் சிதிலமடைந்து காணப்படும் பல கோயில்களைப் பார்க்கும் போது மனம் கனக்கும். மற்ற நாடுகளில் உள்ளக் கட்டிடக்கலையை அதன் பளபளப்பிலும் விளம்பரத்திலும் மயங்கி பாராட்டும் நம்மூர் காரங்களைப் பார்த்தால் கோபமாக வரும். நம் நாட்டுக்கோயில்களில் உள்ள கட்டிடக்கலையின் அற்புதத்தில் பாதி கூட இல்லாத கட்டிடங்களை, தலையில் தூக்கி வைத்து ஆடும் போது அங்கலாப்பாகவும், வெறுப்பாகவும் இருக்கும்.

நம் நாட்டின் கட்டிடக் கலையின் பெருமையையும்(ஆயிரம் தூண்கள்), அதன் பழமையயும் (கருப்பு வெள்ளை)கவனிப்பாரற்று கிடக்கும் நிலைமையையும்(தளத்தில் கிடக்கும் குப்பை) இப்படம் சிறிதளவேனும் சித்தரிப்பதாகக் கருதுகிறேன்.

8 comments:

SurveySan said...

நாதனின் படம் அருமை என்பதில் சந்தேகமில்லை.

உங்க படத்துக்கு நான் ஏற்கனவே கமெண்ட்டு சொல்லிட்டேன்.
இன்னொரு கமெண்ட்டு, உங்க படத்தை வெர்டிகலா கட்டம் கட்டி ஒரு ரோ பில்லர்ஸ் மட்டும் காட்டியிருந்தா எடுப்பா இருந்திருக்கும். :)

சரண் said...

SurveySan said...
//உங்க படத்தை வெர்டிகலா கட்டம் கட்டி ஒரு ரோ பில்லர்ஸ் மட்டும் காட்டியிருந்தா எடுப்பா இருந்திருக்கும். :)//

உதவி ஆலோசனைக்கு நன்றி Survey San.

கண்டிப்பா இன்னும் நல்லா எடுத்திருக்காலாம்.. இருந்தாலும் எத்தனை படங்கள் எடுத்தாலும் நம்மூர் கோவில்களின் அற்புதங்களைக் கொண்டுவரமுடியாது.

thamizhparavai said...

எனக்குப் புகைப்படத்தில் போதிய பரிட்சயம் இல்லையெனினும் மூன்று படங்களும் எனக்கு பிடித்திருந்தது.
நாதனின் படத்தையும், தங்கள் விமர்சனமும் படிக்கையில் எனக்கு நினைவில் தோன்றிய ஒரு கவிதை... சுஜாதாவின் ' கற்றதும்,பெற்றதும்' இல் படித்தது..
'வாழ்ந்து கெட்டவனின் வீட்டை விலை முடிக்கும் முன் உற்றுக்கேள் கொல்லைப்புறத்தில் சன்னமாக எழும் பெண்களின் விசும்பலை'
//மற்ற நாடுகளில் உள்ளக் கட்டிடக்கலையை அதன் பளபளப்பிலும் விளம்பரத்திலும் மயங்கி பாராட்டும் நம்மூர் காரங்களைப் பார்த்தால் கோபமாக வரும். நம் நாட்டுக்கோயில்களில் உள்ள கட்டிடக்கலையின் அற்புதத்தில் பாதி கூட இல்லாத கட்டிடங்களை, தலையில் தூக்கி வைத்து ஆடும் போது அங்கலாப்பாகவும், வெறுப்பாகவும் இருக்கும்.//
சரியாச் சொன்னீங்க பாஸூ....
உங்க படம் எந்தக்கோயில்? மதுரையா...?
நான் கோயில் அவ்வளவா போறாதில்லை. போனாலும் புதுக்கோயில்களுக்குப் போவதில்லை. அதில் பளிங்குக்கற்கள் பக்தியை விடவும் பணத்தையே பறைசாற்றும்...

Amal said...

கொஞ்சம் வேலையினால் உங்க பதிவுப்பக்கம் வரவில்லை.இப்பத்தான் பார்த்தேன். நம்ம படத்தைப்போட்டு, விளக்கி, பிடிச்சிருக்குனு சொன்னதுக்கு நன்றி:-)

நீங்க San diego-லயா இருக்கீங்க?!

சரண் said...

//'வாழ்ந்து கெட்டவனின் வீட்டை விலை முடிக்கும் முன் உற்றுக்கேள் கொல்லைப்புறத்தில் சன்னமாக எழும் பெண்களின் விசும்பலை'//

இந்த மாதிரி பல வீடுகள் நம்மூர் பக்கம் இருக்குங்க..

இன்னும் சரியா சொல்லனும்னா.. நம்ம நாடே வாழ்ந்து கெட்ட நாடுதாங்களே.. இப்ப நம்மெல்லாம் நாடுவிட்டு நாடுவந்து இப்படியெல்லாம் கஷ்டப்படம்னு இருக்கு.. நம்ம வாழ்ந்த இடங்களெல்லாம் அந்த சோகத்ததானே பறைசாற்றுகிறது..



//உங்க படம் எந்தக்கோயில்? மதுரையா...?//

நெல்லை.. நெல்லையப்பர் கோயில்...


//நான் கோயில் அவ்வளவா போறாதில்லை. போனாலும் புதுக்கோயில்களுக்குப் போவதில்லை. அதில் பளிங்குக்கற்கள் பக்தியை விடவும் பணத்தையே பறைசாற்றும்...//

நூத்துக்கு நூறு சரி.. அதுவும் இருக்கற கோயிலையெல்லாம் விட்டுட்டு புதுசா கோயில் கட்டறேன்னுன் உண்டியல் தூக்கிட்டு வரவனையெல்லாம் உதைக்கலாம்னு இருக்கும்..

சரண் said...

Amal said...
//கொஞ்சம் வேலையினால் உங்க பதிவுப்பக்கம் வரவில்லை.இப்பத்தான் பார்த்தேன். //

வருகைக்கு ரொம்ப நன்றிங்க..


//நம்ம படத்தைப்போட்டு, விளக்கி, பிடிச்சிருக்குனு சொன்னதுக்கு நன்றி:-)
//

பிடிச்சதோட மட்டுமில்லாமல் ரொம்ப மனதை பாதித்தப் படம்.. இந்த மாதிரி ஆயிரத்தில் ஒரு படம் தான் இப்படி மனதில் பதியும்.. நடுவர்களுக்கு இப்படித் தோன்றாதது மனதுக்கு ஏமாற்றமாக இருந்ததனால்தான் இப்பதிவே எழுதினேன்...


அமாங்க.. சாண்டியோகா தான் நம் தற்போதய ஊரு.. நீங்களும் பக்கத்துலதான் இருப்பீங்க போலிருக்கு..

Amal said...
This comment has been removed by the author.
Amal said...

Surya,
I deleted the previous comment. hope you got my emailid.