பழமப் பேசி அப்பங்கிட்ட
எருக்கம்பூவப் பத்தி பேசிட்டிருக்கும் போது, சிறுசுவகளா இருக்கரப்ப நாமெல்லாம் வெளயாடின வெளயாட்டுகள பத்தி ஒரு பதிவு போடணும்ன்னு சொல்லிட்டிருந்தோம்.
சரி.. நாம வெளயாண்ட வெயாட்டெல்லாம் என்னென்னனு யோசிச்சு, ஆத்தாக்கிட்டயும், தங்கமணிக்கிட்டயும் நோண்டி நோண்டிக் கேட்டு அதெல்லாம் நாமலே எழுதலாம்னு..
இதுவரைக்கும் ஒரு பத்து வெளயாட்டு தேறியிருக்கு. அதுல ஒண்ணொன்னா சொல்லறேன்..கேட்டுக்கோங்க..
நீங்களும் இந்த வெளயாட்டெல்லம் வெளயாடி இருப்பீங்க.. இதெல்லாம் எங்கூருல (கொங்கு நாடு: ஈரோடு: மொடக்குறிச்சி) மாடு மேக்கறப்ப தோட்டந்தொரவுல வெளயாண்டது.. உங்கூருலயும் வெளயாடியிருப்பீங்க.. ஆனா கொஞ்ச வேற மாதிரி இருக்கலாம்.. அதெல்லாம் சொல்லுங்க..

அப்புறம்.. முக்கியமா ‘
பழம பேசி' அப்பனுக்கு நன்றி சொல்லிக்க கடமை பட்டிருக்கேன். அவருதான் இந்த மாதிரி பதிவுக்கெல்லாம் முன் மாதிரி.
மொத வெளையாட்டு: 1)அஞ்சாங்கல்:பொதுவாச் சொல்லணும்னா கல்லத் தூக்கிப்போட்டு அடைப்பு (‘') குறிக்குள்ளார உள்ளப் பாட்டச் சொல்லிட்டே கல்லப் பொறுக்கர வெளையாட்டு. கைய்யும் கண்ணும் நல்லா ஒட்டுக்கா வேல செய்யணும். (Hand - Eye Coordination). இது பொதுவா அம்மணிகளோட வெளையாட்டு.
பசங்களும் வெளயாடலாம்.. ஒன்ணும் தப்பில்ல..
தேவையான விளையாட்டுப் பொருட்கள்: 5 கற்கள் (வெங்கச்சாங்கற்கள்).
ஆட்கள்: 2 பேர், அல்லது அதற்கு மேல்.
1: முதலாட்டம் - ‘ஒண்ணாநம்மா ஊசிமேல ஊசி'அஞ்சு கல்லையும் கையில எடுத்து வீசணும். கல்லெல்லாம் ஒன்னுகொன்னு முட்டாம இருகிறது நல்லது. அதுல ஒரு கல்ல எடுத்து மேல நேரா வீசிப்போட்டு, கீழருக்கற ஏதொருக் கல்ல எடுத்ததுக்கப்புறம் மேல வீசுன கல்லயும் அதே கையில புடிக்கோணும். இப்படியே “ஒவ்வொண்ணா” மத்தக் கல்லையெல்லாம் எடுத்து முடிச்சுட்டா முதலாட்டம் முடிஞ்சது. இதுல எப்பவாவது மேல வீசுன கல்ல புடிக்காம வுட்டாலோ, கீழிருக்கற கல்ல எடுக்காம விட்டாலோ, ஒரு கல்ல எடுக்கும் போது மத்த கல்ல அலுங்கினாலோ (அசைச்சாலோ) ஆட்டம் அடுத்தாளுக்கு. அடுத்தாளும் இதே மாதிரி அஞ்சாட்டத்துக்குல்லார உட்டுட்டா ஆட்டம் உங்களுக்கே மறுபடியும் வரும். நீங்க மறுபடியும் எங்க உட்டீங்களோ அங்கிருந்து மறுபடியும் ஆரம்பிக்கோனும்.
2: ரண்டாம் ஆட்டம் - ‘ரெண்டானம்மா ரத்தினக்கிளி'மறுபடியும் அஞ்சு கல்லயும் கையில எடுத்து வீசணும். இப்ப நாலு கல்லுக, ரண்டு சோடியா இருந்தா நல்லது. (எல்லாம் ஒரு நேக்குதான். வெளையாட வெளையாடத் தானா வந்துரும்.)
இப்ப சோடியா (அல்லது பக்கம் பக்கமா) இருக்கற நாலு கல்ல வுட்டுட்டு, ஒரு கல்ல எடுத்து வீசிப்போட்டு, ரெண்டு கல்ல ஒட்டுக்கா எடுத்த பின்னாடி மேல வீசுன கல்ல அதே கையில புடிக்கோணும். மொதல்ல சொன்னமாதிரியே, எதயும் வுட்டுரக்கூடாது, மத்த கல்லயும் அலுங்காம எடுக்கணும்.
3: மூணாம் ஆட்டம் - 'மூணானம்மா முத்துச்சரம்'இப்ப அஞ்சுகல்ல எடுத்து வீசும்போது மூணு கல்லுக ஒட்டுக்கா இருக்கர மாதிரி வீசணும்.
மூணு கல்ல ஒட்டுக்கா எடுத்துட்டு, தனியா இருக்கற ஒரு கல்ல எடுக்கணும். ஒரு கல்ல மொதல்ல எடுத்துட்டு மூணு கல்ல மறுக்காக் கூட எடுக்கலாம்.
4: நாலாம் ஆட்டம் - ‘நாலானம்மா நாகேஸ்வரம்'இந்தாட்டம் கொஞ்சம் வேற மாதிரி வெளையாடோனும். அஞ்சு கல்லயும் கயில வெச்சுட்டு அதுல ஒரு கல்ல மேல வீசோணும். அந்தக் கல்லு மேல போயிட்டு வரதுக்குல்லார மீதி நாலு கல்லயும் கீழ ஒட்டுக்கா வெச்சுட்டு, மொதக்கல்லப் புடிக்கோணும். அப்புறம் மொத மூணு ஆட்டமாறியே அந்தக் கல்ல வீசிப்போட்டு கீழிருக்கற நாலு கல்லயும் ஒட்டுக்கா
எடுக்கொணும்.
5: அஞ்சாம் ஆட்டம் - ‘அஞ்சானம்மா பஞ்சலிங்கம்'இது ரொம்ப முக்கியம்மான ஆட்டம். இந்த ஆட்டத்துக்குள்ளாரயே பத்து ஆட்டம் இருக்குது.
5.1: ‘குத்தாலக்க'இதுல நாலாம் ஆட்டம் மாறியே அஞ்சு கல்லயும் கையில வெச்சுட்டு அதுல ஒரு கல்லத் தூக்கிப்போட்டு, அதே கையில ஆட்காட்டி விரலால சுண்டி கீழ நெலத்தத் தொடணும்.
5.2: ‘கோழிப்பிய்யி'இது 'குத்தாலக்க' வோட 'ர்ர்ரிப்ப்பீட்ட்டு'
5.3: ‘வெச்செடுப்பேன்'இதுவும் நாலாம் ஆட்டம் மாறியே அஞ்சு கல்லயும் கயில வெச்சுட்டு அதுல ஒரு கல்ல மேல வீசிட்டு மீதி நாலு கல்லயும் கீழ ஒட்டுக்கா வெச்சுட்டு, மொதக்கல்லப் புடிக்கோணும்.
5.4: 'தப்புக் குப்பு'இப்ப நாலு கல்லு கீழிருக்கும். ஒரு கல்லு உங்க கையில இருக்கும். இப்ப கையிலிருக்கற ஒரு கல்லத் தூக்கிப்போட்டு ரெண்டு கையாலயும் கீழ நெலத்தத் தட்டணும். அப்புறம் மேல போன கல்லப் புடிக்கோணும்.
5.5: ‘வாரி வளி'இப்ப கையிலிருக்கற ஒரு கல்லத் தூக்கிப்போட்டு, கீழிருக்கற கல்லையெல்லாம் எடுத்துட்டு வீசுண கல்லப் புடிக்கோனும்.
5.6: 'சிணுக்கு'ஆட்டத்தோட முக்கியமான கட்டம். போன ஆட்டத்துக்கப்புறம் உங்க உள்ளாங்கைய்ல அஞ்சு கல்லும் இருக்கும். அந்த கல்லையெல்லாம் தூக்கிப்போட்டு பொறங்கையால புடிக்கணும். முடிஞ்சவரைக்கும் கொஞ்சமா புடிக்கிறது நல்லது. ஆனா அதுக்கு முயற்சி பண்ணினா எல்லாக் கல்லயும் உட்டுருவீங்க.. பாத்துக்கொணும். அப்படியே எதயும் புடிக்காம வுட்டுட்டா உடனே ‘மொட்டக்கையில மோரூத்து' - ன்னு சொல்லிட்டா எதிராளி மறுபடியும் கல்லெல்லாம் உங்க கயில குடுக்கொணும். ஆனா நீங்க சொல்லறதுக்கு முன்னாடி எதிராளி ‘தூ' சொல்லீட்டா உங்காட்டம் காலி.
இப்ப பொறங்கையில இருக்கற கல்ல அப்படியே வீசி புடிக்கொணும். இப்ப உங்க உள்ளாங்கையி கீழ நெலத்தப் பாத்துத்தான் இருக்கொணும். அதாவது வீசுன கல்ல சொக்கிப் புடிக்கோனும். இதுல ரொம்ப முக்கியம் வீசுன கல்ல எல்லாம் புடிக்கொனும். அதனாலதான் மொதல்ல கொஞ்சமா கல்லப் புடிக்கோணுங்கறது.
5.7: ‘சித்திராங்கி'புடிச்சகல்லயெல்லாம் சிணுக்கு ஆட்டமாரியே மறுபடியும் வெளையாடொணும்.
5.8: 'முத்துமால'இதுவும் சித்திராங்கி மாரியேதான்.
5.9: 'காட்டங்கருங்கல்'அஞ்சு கல்லையும் எடுத்து வீசி பொறங்கையில புடிச்சு, எதிராளிய புடிச்ச கல்லுல ஏதோன்ன தொடச்சொல்லோனும். எந்தக் கல்லத் தொடறாங்களோ அந்தக் கல்லப் சொக்கிப்பொட்டு புடிக்கொனும். எதிராளி வெவரமானவனா இருந்தா புடிக்க முடியாத ஒரு கல்ல தொடுவாங்க. நீங்க இன்னும் வெவரமா ஒரே ஒரு கல்ல மட்டும் புடிக்கலாம். ஆனா ஆட்டத்தோட தொடக்கத்திலேயெ இது ஒத்துக்கப்படுமா படாதான்னு பேசி முடிவு பண்ணிக்கறது நல்லது.
5:10: ‘பணம் பொறுக்கி' இது அஞ்சாங்கல் ஆட்டத்தோட கடைசி, அப்புறம் இது மொதலாட்டாம் மாரியேதான். கையிலிருக்கற கல்ல வீசிப்போட்டு கீழிருக்கற கல்ல ஒவ்வொண்ணா எடுக்கறது.
இந்த ஆட்டம் வரைக்கும் யாரு மொதல்ல முடிக்கறாங்களோ அவங்கதான் ஆட்டத்துல செயிச்சவங்க...
ரெண்டாவது வெளையாட்டு: 2)அச்சாங்கல்:இந்தாட்டம் அஞ்சாங்கல் ஆட்டத்தோட இன்னொரு மாதிரி. நாலு கல்லுக சேந்தா ஒரு ‘அச்சு'
தேவையான விளையாட்டுப் பொருட்கள்: குறைந்தது 16+1 கற்கள் (4 அச்சு + 1 தாச்சாங்கல்).
ஆட்கள்: 2 அல்லது மேல்.
எல்லாக் கல்லயும் தூக்கிப் போட்டு போறங்கையில புடிக்கோணும். புடிச்ச கல்லயேல்லாம் அப்படியே தூக்கிப்போட்டு மறுக்கா உள்ளங்கையில புடிக்கோனும். இதுல எந்தக் கல்லையும் வுட்டறக் கூடாது.
எத்தன கல்லப் புடிக்கறீங்களோ அதையெல்லாம் அச்சு அச்சா பிரிச்சு வெச்சுக்கணும். அச்சு சேர்ரதுக்கு முன்னாடி வுட்டுட்டா அச்சு சேராத கல் எல்லாத்தயும் எதிராளிக்கு கொடுத்தடனும்.
ஒரு ஆட்டம் முடிவுல யாரு கம்மியா அச்சு சேத்தியிருகாங்களோ அவங்க எல்லாத்தயும் கொடுத்து அதிக அச்சு சேத்துனவங்க அதிகமா சேத்துனத வெச்சுக்கிட்டு மீதிய போட்டு மறுபடியும் வெளயாடனும். இப்படி யாரு எல்லா அச்சயும் எடுக்கறாங்களோ அவங்க செயிச்சவங்க.
இதுல தோத்தவங்களுக்கு பருப்புக்கலியாணம் பண்ணி அவமானப் படுத்துவதும் உண்டு.
பருப்பு கலியாணம்: ரெண்டு கையயும் பிச்சையெடுப்பது போல் வைத்து, மண்ணைப் போட்டு அதில் ஒரு சின்னக் குச்சியை நட்டு வெச்சுட்டு, எச்சையெல்லாம் துப்பி, கண்ணைக் கட்டி கொஞ்ச தூரம் கொண்டுபோய் கையிலிருக்கறதையெல்லாம் கீழே போடச் சொல்லிட்டு, தல கிறுகிறுக்க சுத்து சுத்துனு சுத்தி ஆரம்பிச்ச எடத்துக்கெ வந்து, கண் கட்ட அவுத்துட்டுட்டு, மறுபடியும் போய் அந்தக் குச்சிய கண்டுபிடிச்சு எடுத்தாரனும்.
இந்தக் கலியானத்துக்கு பயந்துட்டு ஆட்டத்துல பாதியிலேயே எந்திரிச்சு எதிராளி ஓடாமப் பாத்துகரது உங்க சமார்த்தியம்..!
<ஆட்டம் தொடரும்>